Saturday 28 April 2012

காதல்!!! 





காதல் வந்தால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்! தனிமையில் சிரிப்பார்கள் எனக் கேட்டபோது நான் சிரித்தேன்! இது எப்படி சாத்தியம் என்று! இன்றோ நானும் தனிமையில் சிரிக்கிறேன், பல நூறு வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் உள் மனதில் பறக்கின்றன உன்னை நினைக்கையில்!!! 

முன் பனி நேரத்தில் உன்னைச் சந்திக்கையில் ஏதும் தோணவில்லை இன்னும் சில நாட்களில் உன்னை நினைத்துத் தனிமையில் சிரிப்பேன் என்று! 

உன்னைச் சந்தித்த நாளில் என்றும் இல்லாத ஏதோ ஒரு புது வித உற்சாகம் என்னுள். வெளிப்படுத்த வார்த்தை இல்லை என்னிடம்... அன்று உன்னை பிரிந்து செல்கையில் ஏதோ ஒரு மாற்றம், தயக்கம், ஏக்கம்... மீண்டும் உன்னைச் சந்திக்க நேர்ந்திடுமா என்று!

ஓர் இரு நாளில் நம் அனைவருக்கும் வந்த மடலினை நீ எனக்கு மீண்டும் அனுப்பிய போது நான் இவ்விடமே இல்லை... அவ்வளவு ஆனந்தம் அதைப்பார்க்கையில்...ஏன் உனக்கு மட்டும் தெரியாதா என்ன எனக்கும் அந்த மடல் வந்திருக்கும் என்று! அன்று முதல் நாம் மறுமுறை சந்திக்கும் வரை பல நூறு முறை படித்திருப்பேன்.....

எதிர்பார்த்த அந்த நன்னாளும் வந்தது! அன்று முழுதும் என் கண் முன் நீயே நிறைந்திருந்தாய்! உன்னையன்றி வேறெங்கும் நான் அகலவில்லை! தாயை தேடும் சேயை போல் உன் அருகினிலே இருந்திட ஆசைப்பட்டேன்...நம்மை சுற்றி பலர் இருந்ததாலோ என்னவோ நாம் பேசிக்கொள்ளவில்லை வார்த்தைகளில்.. உன் பார்வையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது அன்று தான்...உன் பார்வை என்னும் மாய வலையில் நான் வீழ்ந்ததும் அன்று தான்...

வீழ்ந்தேனடா
நீ கொடுத்த
ஒரு வாய் சோற்றில்..
அது அமுதோ
இல்லை
அமுதினும் இனியதோ... 

மீண்டும் ஒரு பயணம் உன்னுடன், இம்முறை அது சற்றே நீண்ட பயணம்... உன்னைப் பிரிந்து நான் என் வீடு செல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்தியது அப்பயணம்... வெகு நேரம் ஆகிவிட்ட போதிலும் இப்பயணம் இன்னும் சிறிது நேரம் தொடர வேண்டும் என நான் வேண்டிய தருணம்...

குழப்பத்துடன் மெல்ல நகர்ந்தது அடுத்த இரண்டு நாட்கள்... அது நீ அழைப்பாயோ எனக் காத்த்துக்கொண்டிருந்த நிமிடங்கள்... எப்படி இன்று அழைப்பதென்று இருந்தபோது வந்தது உன் அழைப்பு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்... 

நம்மை சேர்த்தது விதியோ இல்லை விழியோ!!! 
உன்னை பார்க்க ஆசைப்பட்டேன்... ஆனால் நீயோ எதிர்பாரா நேரத்தில் இனிப்பான பரிசு கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டாய்...

அடுத்த இரு நாட்களில் தோழிக்காக உணவு கொண்டு வர நினைக்கையில் நீயும் வரக்கூடும் எனத் தெரிந்து நானே சமைக்க முயற்சித்தேன்... முதல் முறை தனியாக சமைக்கிறேன் என்பதை விட அது உனக்குப் பிடிக்குமோ என்ற எண்ணமே இருந்தது... உன்னால், உனக்காய் என்னுள் பல மாற்றங்கள்.. இது தான் காதலோ..

உன்னால்! என் உலகம் அழகாகியது! 
கண்களால் பேசுவதின் அர்த்தம் புரிகிறது! 
மௌனத்தின் மொழி தெரிகிறது! 

எப்போதும் என்னை சுற்றிலும் யாரும்மில்லாது, நீ என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன்... உன் பார்வையின் தாக்கம் இன்னும் தெரிகிறது என்னிடம்... 

திருடனே! என் இரவுகளை களவாடிவிட்டாய்! 
இரவை மட்டும் அல்ல என் இதயத்தையும் தான்... 
என் தனிமையை பறித்து விட்டாய் உன் நினைவுகளால்... 
என் தனிமைப் பயணங்களை இனிக்கச் செய்தாய், உன் குறுஞ்செய்திகளால்.... 
நீ கொடுத்ததாலோ என்னவோ, வெள்ளை காகித ரோஜாவும் மணக்கிறது..... 

ஓர் பார்வையில், ஓர் வார்த்தையில் என்னை பூரிப்படையச் செய்த என்னவனே நிதமும் உன்னை நேசிப்பேன்... அணு அணுவாய்....